பொலன்னறுவையில் சுற்றிவளைக்கப்பட்ட அரிசி அலை களஞ்சியங்கள்!
பொலன்னறுவையில் உள்ள பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களால் நடத்திச் செல்லப்படும் களஞ்சியங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் ஒரு மில்லியன் கிலோ அரிசி, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுஹல்லவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நிபுன அரிசி ஆலை, அரலிய அரிசி ஆலை, நியூ ரத்ன அரிசி ஆலை, சூரிய அரிசி ஆலை ஆகியவற்றின் களஞ்சியங்களில் இருந்தே இந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் கீழ், அத்தியாவசிய சேவைகள் ஆணையளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹல்ல, நுகர்வோர் அதிகர சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சந்த திஸாநாயக்க, பொலிஸார், ச.தொ.ச. அதிகாரிகள், உணவு ஆணையாளர் நாயகம் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சுற்றிவலைப்பை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று குறித்த சுற்றிவலைப்புக்கு செல்ல முன்னர், அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலய உரிமையாளர்களின் களஞ்சியங்களில் உள்ள அரிசியின் கையிருப்பு தொடர்பில் அறிக்கை பெற்றிருந்தது.
இதன்போது அங்கு 136 மில்லியன் கிலோ அரிசி அங்கு களஞ்சியங்களில் உள்ளதாக தெரியவந்த போதும், சுற்றி வலைப்பின் போது ஒரு மில்லியன் கிலோ அரிசியை மட்டுமே அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹல்லவால் அரசுக்கு கையகப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் இவ்வறு அரசுக்கு கையக்கப்படுத்தப்பட்ட அரிசி, ச.தொ.ச. நிறுவனத்துக்கு சொந்தமான 39 லொறிகளில் எடுத்து வரப்பட்டன. பொலன்னறுவையிலிருந்து கையகப்படுத்தப்படும் அரிசியை எடுத்து வர அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிவுன்ஹல்ல ச.தொ.ச.வுக்கு சொந்தமான 70 லொறிகளை எடுத்துச் சென்றிருந்தார்.
எனினும் அதில் 31 லொறிகள் அரிசி இன்றி வெறுங்கையுடன் திரும்பியிருந்தன.
இந் நிலையில் அரசுக்கு கையக்கப்படுத்தப்பட்ட ஒரு மில்லியன் கிலோ அரிசி ச.தொ.ச. ஊடாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 10 நாட்களில் அரிசி உரிமையாளர்களுக்கு அதற்கான பணம் செலுத்தப்படவுள்ளதாக அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.