ரோமுக்கான விசேட விமானத்தில் சர்ச்சை ; வெளிவந்த உண்மைத் தகவல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ரோம் நகருக்கான வானூர்தி (UL1213) தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐரோப்பா செல்ல முன்பதிவு செய்திருந்தோரின் வசதிக்காகவே இந்த வானூர்தி இயக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு அமைச்சரை அழைத்து வர இந்த விமானம் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படும் அந்த அமைச்சர், ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னரே நாட்டிற்குத் திரும்பிவிட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டுடன் இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.