துப்பாக்கி முனையில் 22.3 மில்லியன் ரூபாய் கொள்ளை; உயிரை பணயம் வைத்து பிடித்த பொலிஸ் சார்ஜன்ட்!
வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்காக வந்திருந்த வர்த்தகரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி 22.3 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் துணிகரமாக மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று தம்புத்தேகம என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,
பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக சுமார் 22.3 மில்லியன் ரூபாவை கொண்டு வந்த போதே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்களை மடக்கிய பொலிஸ் அதிகாரி
முகமூடி அணிந்த இருவர் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது வர்த்தகரின் கையில் இருந்த இரண்டு பணப் பைகளை எடுத்துக்கொண்டு ஓட முற்பட்ட போது, அந்த இடத்திற்கு அருகில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் இதனைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேகநபர்கள் இருவருக்கு முன்னால் பாய்ந்து அவர்களின் வழியைத் தடுத்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்
எதிர்பாராமல் எதிரே வந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து தப்பிக்க சந்தேகநபர்கள் அதிகாரியை மிளகாய் பொடியால் தாக்கியுள்ளனர்.
அதோடு சந்தேகநபர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை செயற்படுத்தியபோதும் அது செயற்படவில்லை என கொள்ளையர்களை மடக்கிய தம்புத்தேகம பொலிஸில் பணிபுரியும் சார்ஜன்ட் D.A.C புத்திக குமார தெரிவித்தார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொள்லை சந்தேக நபர்களில் ஒருவர், வர்த்தகர் பணத்தை வைப்பிலிட வருகை தந்த வங்கியின் தனியார் பாதுகாப்பு அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.