மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் வீதிகளுக்கு பூட்டு
பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால், சோமாவதி - சுங்காவில பிரதான வீதியை இன்று (26) பிற்பகல் 4 மணி முதல் மூடுவதற்கு பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
சோமாவதி - சுங்காவில வீதியின் திக்கல பிரதேசத்தில் 35 முதல் 37 வரையான கிலோமீற்றர் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி தற்போது சுமார் 02 அடி நீரில் மூழ்கியுள்ளது.

வாகனப் போக்குவரத்துக்களையும் இடைநிறுத்த நடவடிக்கை
இன்று காலை அவ்வீதியில் காணப்பட்ட சிறிதளவு நீர்மட்டம் காரணமாக இலகுரக வாகனங்களுக்கான போக்குவரத்தை இடைநிறுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும், மாலையாகும் போது நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக, அவ்வீதியூடான அனைத்து வாகனப் போக்குவரத்துக்களையும் இடைநிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த வெள்ள நிலையை கருத்தில் கொண்டு, வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி புனித பூமிக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள் இந்த சில நாட்களைக் கடந்த பின்னர் வருகை தருமாறும், மகாவலி கங்கையின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.