இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திடீரென தாழிறங்கிய வீதி
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ரத்மல்யாய பகுதியில் மூன்று இடங்களில் வீதி தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியதுடன், புத்தளம் தொடக்கம் மங்கள எளிய வரை 4 அடிக்கும் மேல் வெள்ளநீர் மேவிப் பாய்ந்தன.
இதன் காரணமாகவே குறித்த வீதியின் மூன்று இடங்களில் வீதி சிதைவடைந்து தாழிறங்கி பாரிய குழிகளாக காணப்படுவதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், புத்தளம் போக்குவரத்து பொலிஸார் அங்கு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரின் கட்டளைகளுக்கு அமைய வாகனங்கள் பயணம் செய்து வருகின்றனர்.