நாட்டில் சீரற்ற வானிலையால் அதிகரிக்கும் ஆபத்து ; சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல்
அண்மைக்காலமாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் நிகழும் கடுமையான விபத்துகள் குறித்து பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார். மழை பெய்யும் தருணங்களிலும், மழைக்கு முன்னரான மந்தாரமான காலநிலையின்போதும் வீதி விபத்துகள் நிகழும் அபாயம் கணிசமாக அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோசமான வானிலை
மோசமான வானிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக வீதியின் தெளிவான பார்வை குறைவடையும் என்பதால், எதிரே வரும் வாகனங்கள் அல்லது வீதியிலுள்ள தடைகளைத் தெளிவாக அடையாள காண்பது கடினமாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அதிவேக வீதிகளைப் பயன்படுத்துவோர் உட்பட அனைத்துச் சாரதிகளும் மோசமான வானிலையின் போது அதிக வேகத்தில் வாகனங்களைச் செலுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், அவசர சந்தர்ப்பங்களில் இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய பாதுகாப்பான வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறும், அதிவேக வீதிகள் மற்றும் சாதாரண வீதிகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் தவறாது ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பார்வைத் திறன் குறைவதால் வாகனங்களுக்கு இடையே போதிய பாதுகாப்பான இடைவெளியைப் பேணுவது அவசியமாகும்.
சிறப்பாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பாதுகாப்பு தலைக்கவசங்களை அணிவதுடன், இரவு வேளைகளிலும் மந்தாரமான வானிலையிலும் தங்களின் இருப்பை வெளிப்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துமாறும், ஏனைய வாகனங்களுடன் சரியான இடைவெளியைப் பேணுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதிக வேகம், குறைந்த பார்வைத் திறன் மற்றும் மழையினால் ஏற்படும் ஆபத்துகளை அலட்சியப்படுத்துவது பாரதூரமான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், வீதி விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனைத்துச் சாரதிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.