தடுப்புக் காவலிலுள்ள ரிஷாத் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில் சிக்கலில்லை! சட்ட மா அதிபர்
முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க எந்தத் தடையும் இல்லை என சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தாலும், அவர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில் எந்த சட்ட ரீதியிலான தடைகளும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரிஷாத் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிப்பது தொடர்பில், சிஐடியின் பனிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன, சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியிருந்த நிலையிலேயே, சட்ட மா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி சனியன்று, ரிஷாத் பதியுதீன் அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் பிரிவின் கீழ் ரிஷாத் பதியுதீனிடம், சிஐடி பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்னவின் ஆலோசனைக்கு அமைய விஷேட விசாரணைப் பிரிவு 3 ஆம் இலக்க விசாரணை அறை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.டி. குமாரசிங்க தலைமையிலான குழுவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.