காதில் மணியடிப்பது போன்ற சத்தம் ... எதனால் வருகிறது தெரியுமா!
நம்மில் சிலருக்கு சில நேரங்களில் காதில் ஏதோ மணியடிப்பது போன்ற சத்தம் கேட்கும், அதைப் பலர் அனுபவித்திருப்பர். காதில் கேட்கும் அத்தகைய மணியடிக்கும் சத்தம் என்ன, அது எப்படி வருகிறது என்ற சந்தேகங்களுக்கு நிபுணர்கள் கூறியிருப்பது இவைதான்,
காதில் மணியடிப்பது போலக் கேட்கும் சத்தத்திற்கு தினட்டஸ் (Tinnitus) என்று பெயராம். சிலருக்குப் பறவைகளின் ஒலி, ரீங்காரம், சீறுவது போன்ற சத்தம், கர்ஜனை, அலறல் போன்றவையும் கேட்கலாம்.
வழக்கமாக அது தலையின் உள்ளிருந்து வருவதுபோல் உணரப்படுகிறது. சில நேரங்களிலிருந்து அதே சத்தம் தூரத்திலிருந்து வருவது போலவும் உணரப்படலாம். சிலருக்கு தினட்டஸ் அடிக்கடிக் கேட்கும். சிலருக்கு அது ஒருசில வேளைகளில் மட்டுமே தோன்றும்.
(Tinnitus) தினட்டஸ் எப்போது ஏற்படுகிறது?
உலகில் பெரும்பாலானோருக்கு தினட்டஸ் தோன்றுவது வழக்கம்தான் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பெரிய சத்தம், பொதுவாக ஒருவர் பெரிய சத்தத்தைக் கேட்டபின் குறுகியகாலத்துக்குத் தினட்டஸ் தோன்றும்.
சிலவகையான மருந்துகளை உட்கொள்ளும்போது,
சில மருந்துகளின் பக்கவிளைவாகத் தினட்டஸ் ஏற்படலாம். அத்தகைய மருந்துகளை உட்கொள்வது நிறுத்தப்பட்டால் தினட்டஸ் ஏற்படுவது நின்றுவிடும்.
55 வயதைத் தாண்டியவர்கள்,
இந்த வயதைத் தாண்டிய பலரிடையே தினட்டஸ் ஏற்படுவது வழக்கம். காதுகளின் கேட்கும் ஆற்றல் குறையும்போது தினட்டஸ் ஏற்படுகிறது. ஆனால் அது மிகக்கடுமையான உடல்நலப் பிரச்சினையல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்குக் கேட்கும் சத்தம் இன்னொருவருக்கும் கேட்குமா? என்றால் இல்லை என்பதுதான் பதில். ஆனால் ஒருசிலவேளைகளில் சிலருக்கு இதயப் பிரச்சினைகள் இருக்கும்போது வழக்கத்துக்கு மாறான இதயத் துடிப்பு காதுகளில் தினட்டஸ் சத்தமாகக் கேட்கப்படும்.
அந்த நபரின் இதயத் துடிப்பை மருத்துவர் ஸ்டெதாஸ்கோப் (stethoscope) கருவி வழியாகக் கேட்கலாமாம்.
அதேசமயம் காதுக்குள் சில நேரங்களில் இதயத் துடிப்பின் சத்தம் தினட்டஸ் வழியாக உணரப்படும். ஒருவரின் நரம்புகள் பலவீனம் அடையும்போது அவற்றின்மூலம் அந்தச் சத்தத்தை அதிகம் கேட்கலாம். எனவே இதயத் துடிப்பைப்போல் வரும் தினட்டஸ் குறித்து மருத்துவரை நாடுவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
உடலில் கட்டி ஏற்பட்டிருப்பதையோ நரம்பில் கோளாறு ஏற்பட்டிருப்பதையோ அது உணர்த்துகிறது. இத்தகைய சூழல் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களிடையே ஏற்படக்கூடியது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தினட்டஸை முற்றிலும் முறியடிக்கலாமா? அதற்குத் தீர்வு உள்ளதா?
தினட்டஸுக்குத் தீர்வு இல்லை என்கின்றனர். ஆனாலும் காலப்போக்கில் அது பழகிப்போய்விடும் என நிபுணர்கள் கூறுகின்றனர் .