முல்லைத்தீவு நாயாறு படகுச் சேவைக்கு மட்டுப்பாடு
முல்லைத்தீவிலிருந்து நாயாறு பாலம் வழியாக கொக்கிளாய்க்கான போக்குவரத்து நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கடலின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மாலை ஆறு மணி வரை மாத்திரமே நாளாறு களப்பில் படகுச் சேவையை மேற்கொள்ள முடியும் கடற்படை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த படகு சேவையை பயன்படுத்துவோர் மாலை ஆறு மணிக்கு முன்னர், பயண ஆரம்ப இடத்திற்கு வருகைதர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாலை ஆறு மணிக்கு பின்னர் படகுச் சேவை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைகள், நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்காக மாத்திரமே 24 மணித்தியால இலவச படகுச் சேவை முன்னெடக்கப்படும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் நாயாறு பாலம் சேதமடைந்தது.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்தும் தடைப்பட்டது. இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் இலவச படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இதனால் தனியாரினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பற்ற படகுச் சேவையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.