விரலில் மை பூசியிருந்தால் சாப்பாடு இலவசம்; தேர்தல் வாக்களிப்பை ஊக்குவிக்க வித்தியாசமான முயற்சி!
இந்தியாவின் பெங்களூவில் விரலில் மை பூசப்பட்டிருப்பதை காட்டினால், ஹோட்டலில் ஒன்றில் இலவசமாக உணவு வழங்கப்பட்ட சம்பவமொன்றுஇடம்பெற்றுள்ளளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (10) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில் பெங்களூரு வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள உணவகங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன.
உணவகங்கள் சலுகை
அதன்படி பெங்களூரு ஹட்சன் சதுக்கத்தில் உள்ள நிசர்கா உணவகம் வாக்களித்தவர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தோசை, மைசூர் பாக், தர்பூசணி பழச்சாறு ஆகியவற்றை இலவசமாக வழங்கியது.
வாக்களித்ததற்கு ஆதராமாக மக்கள் தங்களின் மை இட்ட விரலை காட்டி உணவை வாங்கி சுவைத்தனர். இதே போல முதலில் வந்த 100 வாக்காளர்களுக்கு இலவச சினிமா டிக்கெட்டையும் அந்த உணவகம் சார்பில் வழங்கப்பட்டது.
இதுகுறித்து நிசர்கா உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில்,'
'கடந்த 2018ம் ஆண்டு தேர்தலின்போது 3 ஆயிரத்து 900 பேருக்கு தோசை வழங்கினோம். 2019 மக்களவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 100 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் இலவசமாக உணவு வழங்க தடை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, அனுமதி பெற்றோம்.
இந்த முறை காலை 7 மணி முதலே வாடிக்கையாளர்கள் எங்களது உணவகத்தை தேடி வந்தனர். 8 ஆயிரம் பேருக்கு உணவைப் பரிமாற தயாராக இருந்தேன். மாலை 6 மணி வரை 5 ஆயிரத்து 300 பேர் வந்து தோசை, மைசூர் பாக், தர்பூசணி பழச்சாறு ஆகியவற்றை சுவைத்துள்ளனர்.
இதன் மூலம் பெங்களூருவில் வாக்குப்பதிவு அதிகரித்து, நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். நம்முடைய ஜனநாயகத்தை காப்பதற்காகவே இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன்''என கூறியுள்ளார்.