ராஜபக்சர்களை குறைகூறுபவர்கள் ரணசிங்க பிரேமதாசவை மறந்துவிட்டார்கள்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு ராஜபக்சர்களை குறைகூறுபவர்கள் அதனை ஆரம்பித்து வைத்த ரணசிங்க பிரேமதாசவை மறந்துவிட்டார்கள் என தேசிய ஜன சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தரைமட்டமாக்க ராஜபக்சக்கள் செய்ததை இன்று அனைவரும் நினைவுகூருகின்ற போதிலும், அந்த வேலையை ஆரம்பித்தவர் சஜித்தின் தந்தை ரணசிங்க பிரேமதாச எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரேமதாச மருமகன் பூ வியாபாரம்
விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்சவின் குடும்ப ஊழலை மட்டுமே நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். ஆனால் தேசிய விமான சேவைக்குள் உறவினர்களை முதலில் அறிமுகப்படுத்தியது சஜித்தின் தந்தை பிரேமதாசதான் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1990 களின் முற்பகுதியில் ஶ்ரீலங்கன் பணிப்பாளர் சபைக்கு தனது மருமகனை நியமித்ததன் மூலம் அதை அவர் தொடங்கிவைத்தார். அவரது மருமகன் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
அதனால் ஏர்லங்கா விமானங்கள் , அவருடைய பூ வியாபாரத்துக்கு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1991 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்ட பல லஞ்ச குற்றச்சாட்டுக்களில் அவரது மருமகன் மற்றும் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விமானங்கள் மூலம் பூக்களை இறக்குமதி செய்ய சஜித்தின் தந்தை பிரேமதாசவின் மருமகன் ஶ்ரீலங்கன் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டதாகவும் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.