இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு மாநாயக்க தேரர்களிடம்!
இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை மாநாயக்க தேரர்கள் ஏற்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகையில்,
அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கூறுவது இலகுவானது ஆனால் அதற்கான பொறுப்பை ஏற்க இதுவரை எவரும் முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தையும் பிரதமரையும் நீக்கி இடைக்கால அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான பிரேரணை மாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தேரர், அவர்கள் பதவி விலக வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு பொறுப்பேற்க யாராவது முன்வர வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
ஒருவேளை அப்படி யாரும் முன்வரவில்லை என்றால் அரசாங்கத்தின் பொறுப்பை மாநாயக்க தேரர்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் தான் இருப்பதாகவும், இந்த நிலைமை குறித்து ஆரம்பம் முதலே அரசாங்கத்தை எச்சரித்ததாகவும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆட்சியாளர்கள், தாம் கூறுவதற்கு காது கொடுத்து கேட்காமையினால் ஏற்பட்டதன் விளைவு என ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் கட்சிகளை வெற்றி கொள்வதற்காக உழைக்கவில்லை. நாட்டையும் தேசத்தையும் மதத்தையும் வென்று சிறந்த சமுதாயத்தை உருவாக்கவே முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். இப்போது என்ன நடந்தது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சித்தாலும், நாங்கள் பிரச்சினைகளில் சிக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொழும்பு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் பலர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழைப் பெற மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.