நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை ; நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்து வருவதை அடுத்து, அவற்றின் வான் கதவுகள் அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று (14) வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரையான நிலவரங்களின்படி நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலைமைகள் வருமாறு, இன்றையதினம் காலை மூடப்பட்டிருந்த தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள், அதன் நீரேந்துப் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக இன்று இரவு 7.30 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாசனத் திணைக்களம்
இதன்படி, இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,400 கன அடி உபரி நீர் தெதுரு ஓயாவிற்குள் திறந்து விடப்பட்டுள்ளது.
புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பெய்து வரும் பெருமழை காரணமாக பின்வரும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, மீ ஓயாவிற்குள் பெருமளவிலான நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இன்று இரவு 7.00 மணியளவில் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு கதவுகள் 3 அடி வீதமும், மற்றுமொரு இரண்டு கதவுகள் 2 அடி வீதமும் திறக்கப்பட்டு விநாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளன. 4 கதவுகள் 3 அடி வீதமும், ஏனைய 4 கதவுகள் 2 அடி வீதமும் திறக்கப்பட்டு விநாடிக்கு 4,400 கன அடி நீர் மீ ஓயாவிற்குள் பாய்கிறது.
இங்கினிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களில் இருந்து பெருமளவு நீர் வெளியேற்றப்படுவதால், மீ ஓயா படுகையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் ஆற்றின் கீழ்நிலைப் பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான் பாயத் தொடங்கியுள்ளதாக அதன் பொறுப்பதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக கெஹல்கமு ஓயாவின் நீர்மட்டம் சற்றே உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.