மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் ; மெலோனியின் இன்ஸ்டா பக்கத்தில் குவியும் வேண்டுகோள்
உங்கள் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று, இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வேண்டுகோள் குவிந்து வருவது, நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், திடீர் திருப்பமாக, நாட்டைத் தாண்டி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் மாறியிருக்கிறது.

போராட்டம்
இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவுக்கான கருத்துப் பிரிவில் ஏராளமானோர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ராஜிநாமா செய்யச் சொல்லுங்கள் என்று மெலோனிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்ற போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதல்களைத் தொடர்ந்து போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலி பிரதமர் வரை சென்றிருக்கிறது.
மாணவர்களின் மிகப்பெரிய போராட்டத்தின் தாக்கம் இப்போது சர்வதேச அளவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது "அன்பிற்குரிய நண்பரான" மோடியை பதவி விலகுமாறு அவரிடம் வலியுறுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது பேசுபொருளாகியிருக்கிறது.