நீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது 75% என்ற அளவில் காணப்படுவதாக அத்திணைக்களத்தின் (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த சிறுபோகப் பயிர்ச்செய்கைக்கான நீரை வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருகின்றது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 73 நீர்த்தேக்கங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் சராசரியாக 75% இற்கும் அதிகமாகவே உள்ளது.
எனவே, இந்த போகத்திற்கான நீரை வழங்க முடியும். குடிநீர் தேவைக்காக ஆறுகளில் இருந்து நீர் பெற்றுக்கொள்ளப்படும் இடங்களில் உவர் நீர் உட்புகும் அபாயம் காணப்படலாம்.
குறிப்பாக நில்வலா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளில் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் நீரை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.