அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அஸ்கிரிய பீடம் விடுத்துள்ள வேண்டுகோள்!
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் அனைத்து அரசியல்வாதிகளும் தமது கட்சி அரசியலை புறந்தள்ளி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) பதவி விலகலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abewardena) இன்று (16-07-2022) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே மெதகம தம்மானந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மகா சங்கத்தினர் வழங்கிய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளமையே அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைய பிரதான காரணமாகும்.
எனவே தற்போதுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமது கட்சி அரசியலை புறந்தள்ளி நாட்டுக்கான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
இந்நிலையில், நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் சட்ட ரீதியானதும், அரசியலமைப்பு ரீதியானதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு சகல மகாசங்கத்தினர் சார்பிலும் அரசியல்வாதிகளைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.