முல்லைத்தீவு விடுதலைப்புலிகளின் நீச்சல் தடாகத்தை விடுவிக்க கோரிக்கை!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட நீச்சல் தடாகம் தற்போது இராணுவத்தினரின் வசமுள்ளள்ளது.
இந்நிலையில் குறித்த நீச்சல் தடாகத்தை முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் நீச்சல் பயிற்சிகளை விளையாட்டு வீரர்கள் பெறும் வகையிலும் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனிடம் கோரிக்கை ஒன்று விடுக்கப்படுள்ளது.
நீச்சல் பயிற்சி மையமாக பயன்படுத்த கோரிக்கை
கடந்த சனிக்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினரின் ஏற்பாட்டில் முல்லை பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி புதுக்குடியிருப்பில் நடைபெற்றிருந்தது.
இந்த போட்டியின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் கலந்துகொண்ட போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்படுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் வைத்தியர் உதயசீலனால் இந்த கோரிக்கை ஆளுநர் முன்பாக முன்வைக்கப்படுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீச்சல் பயிற்சிகள் கடல்களில் நிகழ்த்தப்பட்ட போதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சகல வசதிகளுடனும் நீச்சல் தடாகம் ஒன்று இரணைப்பாலை பகுதியில் ஒரு வளமான நீச்சல் தடாகம் ஒன்று உள்ளது.
அதனை முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமல்ல ஏனைய மாவட்ட வீரர்களும் பயன்படுத்தும் வகையில் பயன்படுத்த கூடியவகையில் அந்த நீச்சல் தடாகத்தை ஒரு நீச்சல் பயிற்சி மையமாக பயன்படுத்த மாவட்ட விளையாட்டுக்குழுவோ அல்லது வேறு யாராவது பொறுப்பேற்று நடத்த ஆவன செய்ய வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
முல்லைத்தீவு இரணைப்பாலை பகுதியில் அமைந்துள்ள இந்த நீச்சல் தடாகம் தமிழீழ விடுதலைப்புலிகளால் நீச்சல் பயிற்க்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தற்போதுவரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.