இலங்கையின் இறப்பு வீதம் தொடர்பில் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் விடுத்துள்ள கோரிக்கை
23.3 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில், சுதேச வைத்தியசாலைகளில் மிகக் குறைந்த மருத்துவர்களே சேவையாற்றுவதாக சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.
அத்துடன் ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரை சந்தித்து, சுதேச மருத்துவத் துறையிலுள்ள முக்கிய சவால்கள் குறித்து அறிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

வைத்தியர் பற்றாக்குறையால் கடந்த காலங்களில் பல வைத்தியசாலைகளின் சேவைகளும், சிகிச்சைகளும், மருந்துகளும் மட்டுப்படுத்தப்பட்டதை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் பெண் சுதேச மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அமைச்சரிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் இறப்பு வீதத்தில் 78.4% தொற்றா நோய்களால் ஏற்படுகின்றது. சுதேச மருத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த இறப்பு வீதத்தைக் குறைக்கலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன் மேலைத்தேய மருத்துவத்தினால் குணப்படுத்த முடியாத பல நோய்களை சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்றும், முதியோர் சேவை, தொற்றா நோய்கள் போன்ற நிலைகளில் இந்த மருத்துவம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்றும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2035 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சுதேச மருத்துவத்தை உலகின் சிறந்த இடத்திற்குக் கொண்டுவரத் தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.