நுரைச்சோலை மின் தடை அறிக்கை தெளிவற்றது ; மின்சார தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு
கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற திடீர் மின் தடை தொடர்பில் தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
தரம் குறைந்த நிலக்கரி காரணமாகவே குறித்த மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தனவா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும் அவை வலியுறுத்தியுள்ளன.
அன்றைய தினம் காலை 11.43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகிலிருந்து பெறப்பட்ட 187 மெகாவாட் மின்சாரம் 450 மில்லி செக்கன்களுக்குள் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 4.1 செக்கன்களுக்குள் நாட்டின் முழு மின் கட்டமைப்பும் செயலிழந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தானியங்கி மின்சாரத் துண்டிப்பு முறைமையின் 5 கட்டங்களும் செயற்படுத்தப்பட்டதுடன், நுரைச்சோலையுடன் விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவெவ, லக்ஸபான உள்ளிட்ட பல நீர்மின் உற்பத்தி நிலையங்களின் அலகுகளும் பாதுகாப்பு முறைமைகள் காரணமாக முடங்கியுள்ளன.
அத்துடன், முழு மின் விநியோகத்தையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர 5 மணிநேரமும் 15 நிமிடங்களும் எடுத்துள்ளன.
மின் கட்டமைப்பை மீள இயக்கும் போது யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட சில நிலையங்களில் தொழில்நுட்பத் தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், நுரைச்சோலை முதலாவது அலகு செயலிழந்தமைக்கான துல்லியமான அடிப்படைக்காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இது தொடர்பான விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.