வாடகைக்கு பெற்ற மோட்டார் சைக்கிள்கள் விற்பனை; மக்களே அவதானம்
வாடகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரைப் பலங்கொடை பொலிஸார் இரத்தினபுரி, சன்னஸ்கம பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்குபவர்களிடமிருந்து குறித்த சந்தேகநபர் சில மாதங்களுக்கு எனத் தெரிவித்தே மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுள்ளதாகவும், அந்தக் காரணத்தைக் கூறி அவற்றின் பதிவுப் புத்தகங்களையும் உரிமையாளர்களிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி, பலங்கொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில் வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்களிடமிருந்து சந்தேகநபர் இவ்வாறு மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் கைது செய்யப்படும்போது, விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்ற பொலிஸாரால் முடிந்துள்ளது.
கைதான சந்தேகநபர் பலங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.