பாடசாலையில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயரை நீக்கம்!
நாட்டின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயரை அவரது பெயரில் உள்ள பாடசாலையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குண்டசாலையில் உள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலையின் பெயரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யுமாறு மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ்.அபயகோனால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த பாடசாலைக்கு குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழுவினால் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இது குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் முன்வைத்த முன்மொழிவுகளை கருத்திற் கொண்டு திணைக்களத்தினால் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரி 1939 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர். டி பண்டாரநாயக்க கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு கல்விச் சீர்திருத்தங்களோடு நாட்டறம்பொத வித்தியாலயம், குண்டசாலை மகா வித்தியாலயம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்த ஆரம்பப் பாடசாலை அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.