மின்சார முச்சக்கரவண்டிகளுக்கான தடை நீக்கம்
மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சட்ட வரைவு ஊடாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி
மின்சார முச்சக்கரவண்டிகளின் உற்பத்தியிலும், பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை மின்சாரத்தில் இயக்குவதற்கும் மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றது.
அத்தகைய முச்சக்கரவண்டிகளின் நிகர எடை 500 கிலோவுக்கு மேல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் விளக்கத்தின்படி, ஒரு மோட்டார் முச்சக்கரவண்டியின் நிகர எடை 500 கிலோ கிராமும் மொத்த எடை 1,000 கிலோ கிராமிற்கும் மேற்படாது இருக்க வேண்டும்.
இதன்படி, மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கு உள்ள தடைகளை நீக்கி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி அது தொடர்பான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.