முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்கள் தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து அரசாங்கம் 1,200 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க எதிர்பார்ப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்களை விமர்சித்தார்.
அவர்கள் முதன்மையாக பொது நிதியை தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.
நிதிப் பொறுப்பைப் பேணுவதன் மூலம் செயல்திறனை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படும்.
செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் இருந்து முப்படையினர் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சர், 2024 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில், டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட செலவினங்களை வெளிப்படுத்தினார்.