ஆப்கானின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு; இடைக்கால பிரதமராகிறார் அமெரிக்காவால் தேடப்படும் நபர்!
அமெரிக்காவால் தேடப்படும் நபரான சிராஜூதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை விட்டு கடந்த மாத இறுதியில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், ஒரு வாரத்துக்குப் பின் தலிபான்கள் இடைக்கால அரசுக்கான பிரதிநிதிகளை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ளனர். பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த், தலிபான் நிறுவர்களில் ஒருவரான முல்லா உமரின் நெருங்கிய கூட்டாளியாவார். அத்துடன் சமயத் தலைவர் என்பதைவிட, ராணுவ தளபதியாக அறியப்பட்ட ஹசன் அகுந்த், தற்போது, முக்கிய முடிவுகளை எடுக்கும் தலிபான் குழுவின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் ஆப்கானின் பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட, முல்லா அப்துல் கனி பரதர் முதலாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் முல்லா அப்துல் கனி பரதர்.
இரண்டாவது, துணை பிரதமராக முல்லா அப்துல் சலாமும், முல்லா உமரின் மகனான முல்லா முகம்மது யாகூப் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜூதீன் ஹக்கானி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 19 பேரும் தலிபான்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர், தலிபான்கள் அல்லாதவர்களையும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கை ஏற்கபடவில்லை.
இதேவேளை இடைக்கால அரசு எவ்வளவு ஆட்சியில் இருக்கும்? எப்போது தேர்தல் நடத்தப்படும்? என்ற கேள்விகளுக்கு தலிபான்கள் பதில் அளிக்கவில்லை. இதனிடையே, ஆப்கான் புதிய அரசு அமைவதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் ஐஎஸ்ஐ அமைப்பின் இயக்குநர் பயஸ் ஹமீது, கடந்த வாரம் காபூல் பயணம் மேற்கொண்ட நிலையில், புதிய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் நிர்வாகிகளை தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என அந்நாட்டின் தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.