SLPP கூட்டத்தில் LTTE கருத்து; விசாரணை TID க்கு
அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகக் கூறி குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) செய்யப்பட்ட முறைப்பாடு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள்
பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, "ஒன்றிணைந்த எதிர்க்கட்சி" என தங்களை அடையாளப்படுத்தும் சிவில் சமூக அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோர் பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சியினரும் கவலை வெளியிட்டிருந்தனர்.
பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா , தன்னை ஒரு "புலி" எனக் குறிப்பிட்டதுடன், "நரியை" ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான கருத்துக்களுக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலருக்கே இக்கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதேசமயம் , மேடையில் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசப்பட்ட போது அங்கிருந்த சில ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.