வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கொள்ளை; பொலிஸார் தீவிர விசாரணை
புத்தளம் கற்பிட்டி, கண்டக்குழி பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து ஒருதொகை பணம் மற்றும் பொருட்கள் என்பன இனந்தெரியாத நபர் ஒருவரினால் களவாடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி கற்பிட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இத்தாலியின் பஜெட் (Paget) நகரைச் சேர்ந்த வெளிநாட்டவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்துள்ளதுடன், இம்மாதம் 17 ஆம் திகதி வரை தங்கியிருக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் கற்பிட்டி பகுதிக்கு வருகை தந்த குறித்த சுற்றுலா பயணி, கண்டல்குழி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்தார்.
கடந்த 13 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில், கண்டல்குழி கடற்கரையில் தனியாக உலாவிக்கொண்டிருந்த போது, அந்த சமயம் அங்கு வருகை தந்த நபர் ஒருவர் அவரது கைப்பையை அவரிடமிருந்து பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மர்ம நபரை அடையாளங்காண தீவிர விசாரணை
குறித்த பையினுள் சுமார் 1,000 யூரோ பெறுமதியான உயர்தர கைக்கடிகாரம், 10,000 இலங்கை ரூபாய் பணம், மூக்குக் கண்ணாடி மற்றும் சுற்றுலா வழிகாட்டி கையேடு என்பன இருந்ததாக அவர் கற்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணி கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட குறித்த மர்ம நபரை அடையாளங்கண்டு, அவரை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.