இலங்கையில் வருடத்திற்கு 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் ; வெளியான தகவல்
வருடத்திற்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 10,000 முறைப்பாடுகள் அதிகாரசபைக்கு கிடைப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிகா மலல்கொட தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின் போது அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தேசிய வழிகாட்டல் கோவையொன்றை அறிமுகப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

துஷ்பிரயோகங்கள்
சிறுவர்களுக்கு ஏற்படும் பல்வேறு துஷ்பிரயோகங்களைக் குறைப்பதும், ஊடகப் பயன்பாட்டின் போது ஏற்படும் பாதுகாப்பற்ற தன்மையைத் தடுப்பதும் இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.
குறித்த வழிகாட்டல் கோவை குறித்து தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொடூரமாக நடத்துதல், இணைய வழியில் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாதல், இளம் வயது கர்ப்பம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற பல நவீன சமூகப் பிரச்சினைகளுக்கு சிறுவர்கள் முகங்கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்த வழிகாட்டல் கோவையின் ஊடாக ஒட்டுமொத்த பிரஜைகளின் பொறுப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என வலியுறுத்தினார்.
இதனிடையே, இணையவழியில் சிறுவர்களுக்கு நிகழும் துஷ்பிரயோகங்கள் மற்றும் அபாயகரமான சம்பவங்கள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் (SLCERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பில் 53 உணர்திறன்மிக்க டிஜிட்டல் ஊடக சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் நவம்பர் மாதமளவில் அது 180 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம் வருமானம் ஈட்டும் அமைப்புகள் (Monetization) செயல்படத் தொடங்கியுள்ளமையால், சிறுவர்கள் தொடர்பான உள்ளடக்கங்களை அதிகளவில் பயன்படுத்த முற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் விழிப்புணர்வின்மை காரணமாக சிறுவர்களுக்கு ஏற்படும் தாக்கம் மிகவும் தீவிரமானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.