குவாண்டஸ் புதிய சாதனை ; 24 மணி 24 நிமிடங்கள் தொடர்ச்சியாக பயணம்!
அவுஸ்திரேலியாவின் குவாண்டஸ் நிறுவனம் , உலகின் நீண்ட தூர விமான சேவை வழங்கும் முயற்சியாக, தொடர்ந்து 24 மணிநேரம் 24 நிமிடங்கள் எயார்பஸ் விமானத்தை பறக்க விட்டு சாதனை படைத்துள்ளது.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வணீக ரீதியிலான இந்த எயார்பஸ் ஏ350 ரக விமானம், கடந்த கடந்த 27ஆம் திகதி மாலை 5.27 மணிக்கு மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, நேற்று (28) மாலை பிரான்சின் டுலூஸ் நகருக்கு சென்றடைந்தது.

மெல்போர்னில் இருந்து பிரான்சின் டுலூஸ் நகருக்கு ....
மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, பசிபிக் பெருங்கடல், அமெரிக்கா, கனடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து 23,075 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது. சுமார் 24 மணிநேரம் 24 நிமிடங்கள் தொடர்ந்து வானில் பறந்துள்ளது. இதன்மூலம், அதிக தூரம் வானத்தில் பறந்து சாதனையை அது படைத்துள்ளது.
அதேவேளை 2005ஆம் ஆண்டு ஹொங்கொங் - லண்டன் சோதனைப் பயணத்தின்போது, போயிங் 777-200எல்ஆர் விமானம் படைத்த 22 மணி நேரம் 42 நிமிடங்கள் என்ற முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து லண்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு 2027ஆம் ஆண்டு முதல் நீண்ட விமான சேவையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட குவாண்டஸ் நிறுவனத்தின் 'புராஜெக்ட் சன்ரைஸ்' திட்டத்திற்கு இச்சாதனைப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.
எயார்பஸ் ஏ350-1000 யுஎல்ஆர் (Ultra Long Range) என்ற பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தில், தொலைதூர பயணங்களை சாத்தியப்படுத்தும் விதமாக, கூடுதலாக 20,000 லிட்டர் எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.