இலங்கை வரலாற்றில் சாதனை வருமானம் ; வரி வலையில் மேலும் 50 லட்சம் பேர்
2026 ஆம் ஆண்டிற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ரூ.2,402 பில்லியன் வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து செயல்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரு திணைக்களங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
வரி ஏய்ப்பைத் தவிர்க்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து கூட்டுத் கணக்காய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு ரூ.2,202 பில்லியன் வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், திணைக்களம் ரூ.2,244 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது இலக்கை விட 42 பில்லியன் ரூபாய் அதிகமாகும். இது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரலாற்றில் ஈட்டப்பட்ட மிக உயர்ந்த வருடாந்த வருமானம் என ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை சுமார் 12 மில்லியன் (1.2 கோடி) தனிநபர்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளன.
வரி வலைப்பின்னலை விரிவுபடுத்தும் நோக்கில், இந்த எண்ணிக்கையை 17 மில்லியன் (1.7 கோடி) வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.