யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா வார்ட்டிலிருந்து ஓர் பதிவு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை நிவி வருவதாக கூறப்படுகின்றது.
அத்துடன் அங்கு நோயாளிகளின் படும் இன்னல்கள் தொடர்பிலும் சமூகவைலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளாகியிருந்ததுடன் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தது.
இவ்வாறான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா வார்ட்டில் உள்ள ஒருவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,
மிகவும் சுத்தமாக, நேர்த்தியாக ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டேலைப்போல பராமரிக்கப்படும் இந்த வார்ட்டில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே ஆர்வத்தோடும் சுறுசுறுப்போடும் அர்ப்பணிப்போடும் பணிபுரிகிறார்கள். எனது பார்வையில் மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் மிகமிகத் திறமைசாலிகளே.
எனக்கு மட்டும் ஏற்றப்படும் ஒட்சிசனும் செலுத்தப்படும் பல்வேறு மருந்துகளும் பாவிக்கப்படும் உபகரணங்களுமே இருபது இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடையதாக இருக்கக்கூடும்.
இது கொரோனாவிற்குமுன் வருடாந்தம் நான் நேரடியாக செலுத்தும் வரிக்குச் சமனானது. நான் ஒருவருடம் முழுவதும் செலுத்தும் வரிப்பணத்தை எனது இரண்டு கிழமை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம் தான்.
எனது பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியில் நேரடியாக தோடர்புகளைப் பேணுபவன் என்ற வகையில் பெரும்பாலும் அனைத்து ஆசிரியர்களுமே அர்ப்பணிப்பும் திறமையும் உள்ளவர்களே. வகுப்பில் அதிக புள்ளிகளைப் பெறும் மாணவர்களுடன் எனது பிள்ளைகளை நான் ஒருபோதும் ஒப்பிடுவதில்லை.
அதேபோல பணக்கார நாடுகளுடன் ஒருபோதும் எனது நாட்டை நான் ஒப்பிடப்போவதில்லை. எத்தனை ஆயிரம் தோழில்முயற்சியாளர்கள் தொழில் துறைகளை கட்டி எழுப்புகிறார்கள், அவர்கள் எத்தனை ஆயிரம் கோடிகளை வரியாகச் செலுத்துகிறார் என்பதில்தான் ஒருநாட்டின் பணக்காரத் தன்மை காணப்படும். எமக்கு எல்லாமே இலவசமாகக்கிடைக்க வேண்டும்.
தருவது எல்லாவற்றையும் எடுத்துவிட்டு நாங்கள் வெளிநாட்டிற்கு ஓடிப்போய் அங்கிருந்து கூவுவோம் என்பவர்களின் கத்தலில் எந்த அர்த்தமும் இல்லை. அதேபொல நாட்டைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாது சும்மாசும்மா போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கும் அனுருத்த பாதெனிய, யோசப் ஸ்டாலின் போன்ற மூடர்களை ஆறு ஏழு வருடங்கள் சிறையில் இடுவதுதான் இப்போதையதேவை.
அரசியல் தலைவர்களும் தம்மாலான முயற்சிகளை செய்கிறார்கள் பெரும்பாலான அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர்.
நாட்டில் ஆங்காங்கே சில சம்பவங்கள் பிழையாக நடத்தாலும் இலங்கை ஒரு தோல்வி அடையாத நாடு என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ளலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.