கட்சியே முக்கியம்: அமைச்சு பதவிகளை துறக்க தயார்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) நிர்வாகத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சதி திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமையில் சுதந்திர கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
செயற்குழு கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுதந்திர கட்சி மறுசீரமைப்பு, மாகாண சபை தேர்தல், அரசியல் பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அனைத்து தொழிற்சங்கங்களையும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மறுசீரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான கூட்டத்தை விரைவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் கட்சி ஏகமனதாக தீர்மானம் எடுத்தால் அமைச்சு பதவிகளை துறக்க தயார் என்றும் அவர் கூறினார்.