தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எங்களிடம் தீர்வு உள்ளது ; திலித்
தற்போதைய தருணத்திலேயே நாட்டைப் பொறுப்பேற்கத் தாம் தயாராக இருப்பதாகவும், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தெளிவான வேலைத்திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் ‘சர்வஜன அதிகாரம்’ இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் Melbourne நகரில் வாழும் இலங்கை சமூகத்தினருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
மெல்பர்னில் உள்ள ‘Acacia Campus Theatre’ மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, ‘சர்வஜன அதிகாரம்’ மற்றும் மெல்பர்ன் சகோதரத்துவம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் பெருமளவிலான இலங்கையர்கள் கலந்துகொண்டிருந்தனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திலித் ஜயவீர, நாட்டில் டொலரின் மதிப்பு வேகமாக உயர்வதற்கான காரணம் அனைவருக்கும் புரியும் விடயமாக உள்ளதாக குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு போரின் தாக்கம் இருந்தாலும், அதுவே பிரதான காரணமல்ல என்றும், நாட்டின் பொருளாதார முகாமைத்துவத் தவறுகளே இன்றைய நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டொலரில் செலவழித்து, ரூபாவில் வரி வசூலித்து, அதனை முதன்மைக் கணக்கில் சேர்த்து பெருமைப்படுவது உண்மையான முன்னேற்றமல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மையப்படுத்தப்பட்ட தெளிவான வேலைத்திட்டமின்றி எந்த அரசியல் இயக்கத்தாலும் நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடியும். ஆனால் நாட்டுக்கு நன்மை ஏற்படாமல் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் பயணம் தனிப்பட்டதா அல்லது குழுவுடனானதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘சர்வஜன அதிகாரம்’ என்பது ஒரே நபரை மையமாகக் கொண்ட அரசியல் இயக்கமல்ல என்றும், கூட்டுச் சக்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் அணுகுமுறை என்றும் கூறினார்.

புதிய தலைமுறையினர் வெறும் வாக்குறுதிகளை நம்புவதில்லை என்றும், அவர்கள் தர்க்கபூர்வமான விளக்கங்களையும் நடைமுறை சாத்தியங்களையும் கேட்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதனால் தான் மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்காமல், நீண்டகால தீர்வுகளை முன்வைக்கும் வேலைத்திட்டத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2029 வரை காத்திருக்காமல் தற்போதைய சூழ்நிலையில் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்று கொடுத்தால் இன்றே செய்து காட்டுவோம்” என்று தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய மிகப்பெரிய பிரச்சினை டொலர் மீதான அழுத்தமே என்றும், அதை சமாளிக்க முதலில் மக்களுடன் உண்மையான மற்றும் நம்பிக்கையூட்டும் உரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இன்று நாட்டில் இல்லாமல் போயிருப்பது டொலர் அல்ல; தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையே” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) தாம் எதிரானவர் அல்ல என்றும், ஆனால் தற்போதைய பொருளாதாரத் திட்டங்களை சரியாக கையாள முடியாத ஆளுமை மற்றும் அறிவின் பற்றாக்குறையே நாட்டின் நெருக்கடியை மோசமடையச் செய்துள்ளதாகவும் திலித் ஜயவீர தெரிவித்தார்.