யாழ். செம்மணி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தொடர்பில் ரவிகரன் வலியுறுத்து
யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(21.08.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “கடந்த 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச உட்பட ஆறு இராணுவத்தினருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி மரணதண்டனை வழங்கியிருந்தது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் 300 தொடக்கம் 400 வரையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சாட்சியமளித்ததற்கமைய, அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அதனைத் தொடர்ந்து செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டிருந்தன.
பின்னர், இந்த விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அப்போது நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியத்தை ஆதாரப்படுத்தும் வகையில் தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றன.
எனவே, குறித்த வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதப்புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும். யாழ். நீதவான் நீதிமன்ற வழக்கேட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட பி2899 என்னும் வழக்கு மீளவும் யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றேன்.