வெடுக்குநாறி மலையின் வழிபாட்டு முறை தொடர்பில் ரவிகரன் வலியுறுத்து
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நின்மதியான முறையில் வழிபடுவதற்கான வழி வகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கோ, பொதுமக்கள் சென்று வருவதற்கோ எவ்வித தடையுமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்ற போதும், ஆலயத்திற்குச் செல்வதற்கான பிரதான வீதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தாகத்தால் தவித்த பக்தர்களுக்கு நீர் எடுத்துச் செல்லப்பட்ட போது இலங்கை காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளனர்.
காலையிலிருந்து மாலை வரை தாகத்தால் தவித்து, குடிநீர் வராததால் கோவில் வளாகத்தில் இருந்த நீரோடையில் நீரை எடுத்து அருந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.
எனவே குடிநீர் நெருக்கடியை நீக்க ஆலய வளாகத்தில் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அதேவேளை, வெடுக்குநாறி மலை அமைந்துள்ள பகுதி தற்போது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. எனவே ஆலய வளாகம் வனவளத் திணைக்களத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
ஆலயத்தில் இனந்தெரியாதவர்களால் விக்கிரகங்கள் திருடப்பட்டிருந்தன. பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் ஆலய விக்கிரங்கள் ஆலய நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றது.
இந்நிலையில் மலை உச்சியிலுள்ள சிவலிங்கத்தின் மேலாக ஏற்கனவே இருந்ததைப் போல சிறிய அளவிலான பாதுகாப்புக் கூடாரம் அமைப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகள் மேற்கொண்ட போது தடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.
எனவே பாதுகாப்புக் கூடாரம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.