குடும்பச் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆன்மிகப் பயணம் ; ரவிமோகன் எடுத்த அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவிமோகன், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து தனது ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை
இவர்களது பிரிவுக்குப் பின்னணிப் பாடகி கெனிஷா தான் காரணம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாகக் குற்றம்சாட்டி ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆர்த்திக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவிக்கக் கூடாது எனப் பாடகி கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 14 ஆம் திகதி இரவு தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த கெனிஷா, தான் ரவிமோகனிடமிருந்தும், சென்னையிலிருந்தும் விலகிச் செல்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே, கடந்த 16 ஆம் திகதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரவிமோகன் கண்ணீர் மல்க ஆர்த்தி குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது அவர், "கடந்த 2 ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன், இனி அப்படி இருக்க முடியாது. விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனிமேல் நடிக்கப் போவது கிடையாது; என் படங்கள் திரைக்கு வராது. என்னால் நிம்மதியாக நடிக்க முடியவில்லை. என் பிள்ளைகளைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள்.

என்னிடமும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன, அவை விரைவில் வெளிவரும்" எனத் தெரிவித்தார். ரவிமோகனின் இந்த உருக்கமான பேட்டிக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.
இந்நிலையில், தான் அறிவித்தபடியே திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ள நடிகர் ரவிமோகன், தற்போது ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக மாலை அணிந்து, விரதத்தைத் தொடங்கியுள்ளார்.
அவர் சொன்னது போலவே திரையுலகிலிருந்து விலகி, மன அமைதிக்காக ஆன்மிகப் பயணத்தில் இணைந்துள்ளதாக இணையவாசிகள் மற்றும் சினிமா வட்டாரங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.