தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்காக துரித அழைப்பு சேவை அறிமுகம்
பாடசாலை கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்குச் செல்வதற்கு மாணவர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியாகவும் திறமையாகவும் வழங்குவதை நோக்கமாக கொண்டு‘1966’ தொழிற்கல்வி துரித அழைப்பு (Hotline) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டவில் உள்ள ‘நிபுணதா பியச’ வளாகத்தில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இது ஆரம்பிக்கப்பட்டது.
‘1966’ அவசர அழைப்பு சேவை மூலம், தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு தகவலையும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் திறமையான சேவைக்காக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) மூலம் தொழிற்கல்வி அமைச்சின் தொழில்நுட்ப அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ‘AI Chat BOT’ இற்குள் பிரவேசிக்கவும் முடியும்.

இதன் மூலம் தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.
புதிய உருமாற்றக் கல்விச் செயல்முறைக்கு இணங்க, புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் கற்கப்படும் தொழிற்கல்வியை மேலும் தொடர்வதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் இணைவதன் முக்கியத்துவத்தை பிரதமர் ஹரிணி இதன்போது விளக்கினார்.
மாற்றப்பட வேண்டிய இடங்களை எந்தத் தயக்கமும் இன்றி மாற்றி, தொழில் கல்விக் கட்டமைப்பினுள் நாளை உலக வேலைவாய்ப்புகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை தரத்துடன் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே உட்பட தொழிற்கல்வி அமைச்சின் பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.