தேர்தலுக்குச் செல்லாது வாக்கெடுப்பை நடத்த முயலும் ரணில்
ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லாது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
"ஒருவருக்கு தெரிவது மட்டுமே இரகசியம் பலரோடு பேசினால் இரகசியமல்ல. நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு சிலர் அமைதி காக்கலாம். எல்லோரும் அப்படி அல்ல. ரணிலின் மாமாவான ஜேஆர் , யார் நாடாளுமன்றத்தை கைப்பற்றினாலும் ஐதேகவின் ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும் விதத்திலேயே தேர்தல் விருப்பு வாக்கு முறையை கொண்டு வந்தார். என ஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
ஐதேகவுக்கு ஆதரவான சிங்கள மற்றும் சிறுபான்மை இனங்களான தமிழ், கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்குகளை மையப்படுத்தியே அவர் தேர்தல் முறையை உருவாக்கினார். ஜேஆரின் கனவு சிதைய ஐதேகவினுள் ஏற்பட்ட பிரிவுகளே ஆரம்ப காரணங்களாகின.
கயிறு கை நழுவி விட்டால் மீண்டும் அந்த பிடி இருந்த இடத்தை பிடிப்பது கடினம். அதேபோல ஜேஆரின் கனவு சிதைந்து சந்திரிகா மற்றும் மகிந்த ஆகியோரது கைகளுக்கு வாக்கு பலம் போனது.
மைத்ரியின் வெற்றி என்பது மகிந்த மேல் இருந்த மக்களது வெறுப்பால் கிடைத்த வெற்றியாகும். மைத்ரிக்கு மக்கள் பலம் பெரிதாக என்றுமே இல்லை. கிடைத்த வெற்றி அற்பனுக்கு பவுசு வந்தால் என்ற பழமொழிக்கு ஏற்றால் போல் செய்த குளறுபடிகளால் மைத்ரி செல்லாக் காசாகிப் போனார்.
ரணில் தொகுதியையும் இழந்து , கட்சியினரது ஆதரவையும் இழந்து ஜனாதிபதியானதற்கு அரகலயவுக்குத்தான் அவர் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு .... இன்று ரணிலிடம் முழுமையாக நாட்டை நிர்வகிக்கும் பலம் இல்லை.
ஆனால் எனக்கிருக்கும் ஜனாதிபதி என்ற பதவியால் ஆணை பெண்ணாக்கவும் , பெண்ணை ஆணாக்கவும் மட்டுமே (அது இப்போது முடியும்) என்னால் முடியாது என ஜேஆர் சொன்னது போல , அனைவரையும் கட்டுப்படுத்த அந்த பதவியால் முடிகிறது.
அத்தோடு ஜேஆர் காலத்தில் , வெளிவிவகார அமைச்சராக இருந்த A.C.S. ஹமீட்டின் உதவியாக இருந்த ரணிலே வெளிவிவகார விடயங்களை கையாண்டார். அதற்கு ஜேஆரின் மருமகன் என்ற உறவும் கை கொடுத்தது.
அதனால் வெளிநாடுகளோடு இன்றும் ரணிலால் இலகுவாக சம்பாசனைகளை செய்ய முடிகிறது. அடுத்தது ரணிலிடம் உள்ள ஆங்கில புலமை மற்றும் தேடல்கள். இன்று உள்ள ஏனைய அரசியல் தலைவர்களிடம் இந்த தகுதிகள் இல்லை.
ரணிலிடம் இல்லாதது மக்கள் செல்வாக்கு மட்டுமே. மக்கள் செல்வாக்கை பெற இன - மதவாதம் பேச வேண்டும். ரணில் , அதில் அதிக நாட்டம் இல்லாதவர். ஆனால் கடந்த காலத்தில் நாடு வீழ்ந்து கிடந்த இடத்திலிருந்து இன்றுள்ள நிலைக்கு ரணிலே காரணம் என மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.
எல்லோரும் நம்பியது போல இன்று ரணில் லிபரல்வாதி இல்லை. ரணிலை எல்லா பதவிகளிலும் பார்த்து இருக்கிறாய். ஜனாதிபதியாக பார்க்கவில்லையே , அதைத்தான் பார்க்கிறாய் என ரணிலின் நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். அது உண்மைதான்.
எனவே இப்போதைக்கு உடனடி தேர்தல்கள் எதுவுமே நடக்காது. அதற்கு முன் மக்கள் எண்ணங்களை உராய்ந்து பார்க்க ரணில் விரும்புகிறார். அதை வைத்தே அடுத்த கட்ட நகர்வு இருக்கும். அதற்காகவே சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த திட்டமிடுகிறார்.
வெளிநாடு சென்று ரணில் திரும்பும் போது , பெரிய பிரச்சனைகள் வரலாம் என சிலர் பேசுவது கேட்கிறது. ஆனால் எதுவும் நடக்காது. மகிந்த பலம் இழந்து விட்டார். அவருக்கு பலம் சேர்த்த இன - மதவாதம் முடக்குவாதமாகிவிட்டன.
அதிகம் துள்ளினால் கடலில் நிற்க வேண்டி வரும் எனும் அச்சம் டைட்டன் பிரச்சனை போல் அவர்களிடம் உள்ளது. சஜித்தோடு இருப்பவர்கள் பகலில் சஜித்தோடும் , இரவில் ரணிலோடும் இருக்கிறார்கள் என ஹிருணிகா பகிரங்கமாக குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
ஜேவீபீ பெண்களை இழிவாக பேசியதாக ஒரு விவகாரத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தினால் மக்கள் ஆதரவு யாருக்கு என தெரிந்துவிடும். அதன்பின் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? "