அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளது ; ரணில் விக்ரமசிங்க
தற்போதைய அரசாங்கம் பொய்கள் போதாதென்று திருட்டுகளிலும் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (01) மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்திய மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரி மோசடி
நிலக்கரி மோசடி மற்றும் மத்திய திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டமை ஆகியவை அண்மைய காலத்தின் பாரிய ஊழல்களாகும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் குரல் எழுப்ப இடமளிக்கப்படாமல் அச்சுறுத்தல்கள் மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது. தோல்வி பயத்தினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் இம்முறை மே தினத்திற்காகத் தெரிவு செய்துள்ள உருட்டு, பிரட்டு, திருட்டு என்ற வாசகம் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த வாசகத்தை உள்ளூராட்சி சபைகள் ஊடாக அடிமட்ட மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும்.
பௌத்த உரிமைகள் மீறப்படுவதாகவும், கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மரபுகள் மீறப்படுகின்றமையும் கவலையளிக்கிறது. 1977 ஆம் ஆண்டு முதல் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது முடங்கியுள்ளன.
வாழ்த்துச் செய்தியின் இறுதியில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.