கைவிலங்குடன் வெலிகடை சிறைக்கு ரணில் ; பதற்றமடையும் தென்னிலங்கை ; அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைவிலங்கு போடப்பட்ட நிலையில் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.08.2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில், தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையைத் தொடங்கியிருந்தது.
அதன்படி, விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.
பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைவிலங்கு போடப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.