நாளை ரணிலும் பதவி விலகவேண்டும்! போராட்டக்குழு நிபந்தனை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நாளை பதவி விலகும் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் (Ranil Wickremesinghe) பதவி விலக வேண்டும் என்று போராட்டக்குழுவினால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - காலி முகத்திடல் போராட்டக்களத்தின் பிரதிநிதிகளுக்கும், சகல அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று (12-07-2022) பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, போராட்டக்காரர்களால், போராட்டத்தின் செயற்பாட்டு திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளும் நிபந்தனையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி உடனடியாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை நியமித்து, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால அரசாங்கம் ஒரு வருடத்துக்கு மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும்.
மேலும் மக்களின் குறுங்கால அடிப்படை பிரச்சினைகளுக்கு 6 மாதங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ராஜபக்ஷவினர் அல்லது ராஜபக்ஷவினரை பாதுகாக்க முனைவோருக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்படக்கூடாது.
தற்போது நடைமுறையில் இருக்கும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகி இடைக்கால அரசாங்கத்துக்கு வழிவிட வேண்டும்.
போராட்டங்களின் போது கைதானவர்கள் உள்ளிட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற பல நிபந்தனைகளை போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.