புதிய ஆளுநர்களுக்கு ஜனாதிபதி ரணில் நேரில் விடுத்த முக்கிய கோரிக்கை!
இலங்கையில் மூன்று ஆளுநர்கள் கடந்த நாட்களில் பதவி விலகிய நிலையில் அந்த வெற்றிடத்திற்கு புதிதாக 3 ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe நியமித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், மூன்று மாகாணங்களின் மக்களுக்கும் சேவையாற்றவே உங்கள் மூவரையும் ஆளுநர்களாக நியமித்துள்ளேன். நீங்கள் மூவரும் அந்தந்த மாகாணங்களில் இன, மத பேதமின்றி சேவையாற்றி மக்களின் மனதை வென்று காட்டுங்கள்." என புதிய ஆளுநர்களிடமும் நேரில் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் முன்னிலையில் இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் 3 புதிய ஆளுநர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஆளுநர்களுக்கு எதிராக மக்கள் தரப்பிலிருந்து முறைப்பாடுகள் எதுவும் வரக்கூடாது என்பதுதான் எனது விருப்பம்.
ஆளுநர்களை நியமிப்பதும் பதவி நீக்குவதும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை முன்னாள் ஆளுநர்கள் மறந்து செயற்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது." - என்றார்