ரம்புக்கனை சம்பவம்; மூவரின் நிலை கவலைக்கிடம்
ரம்புக்கனையில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த 13 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், காயமடைந்த 15 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றதாகவும் கூறப்படுகின்றது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது.
இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்தன. அத்துடன் எரிபொருள் பவுசர் ஒன்றையும் போராட்டதில் ஈடுபட்ட மக்கள் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.
எனினும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர்.
இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போதும் ஊரடங்கு அமுலில் உள்ளது.