ராஜபக்ஷர்கள் மரணம், கொலை ஆகியவற்றின் ஊடாகவே ஆட்சிக்கு வருவார்கள்
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இடம் பெற்றுள்ளது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் உரையாற்றியுள்ளார்.
செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி
"ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் நிச்சயம் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவார்கள். செனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை தொடர்ந்து புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மீது பழியை சுமத்தி தப்பித்துக்கொள்ள ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.
ராஜபக்ஷர்களின் ஆட்சியில் கொலை, இரத்தம் என்பது பிரதான அம்சங்களாகும். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 செய்தி வெளியிட்டதன் பின்னர் பலர் கலக்கமடைந்துள்ளனர். சர்வதேச ஊடகமும் எதிர்வரும் காலங்களில் பல விடயங்களை வெளியிடலாம்.
உண்மையை வெகு நாளைக்கு மறைக்க முடியாது. ராஜபக்ஷர்கள் மரணம், கொலை ஆகியவற்றின் ஊடாகவே ஆட்சிக்கு வருவார்கள் கொலைகள் ஊடாகவே ஆட்சியை தக்கவைத்துக் கொள்வார்கள்.
கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த வேளையில் தொழில் வல்லுநர்கள் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் போத்தல ஜயந்த மற்றும் அந்த சங்கத்தின் செயலாளர் சனத் பாலசூரிய ஆகியோரை அழைத்து அளவுக்கு மீறி செயற்பட வேண்டாம்.
தெரியும் தானே நடப்பதை... ஆகவே ஊடகவியலாளர்களின் போராட்டத்தை உடன் நிறுத்துங்கள்' என்று அச்சுறுத்தி உள்ளார். பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்தபோது பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் வல்லுநர்களின் செயலாளர் சனத் பாலசூரிய ஜேர்மனிக்கு சென்றார்.
போத்தல ஜயந்த கடுமையாக தாக்கப்பட்டு முல்லேரியா வைத்தியசாலைக்கு முன்பாக வீசப்பட்டார். அதன் பின்னர் போத்தல ஜயந்த அமெரிக்காவுக்கு சென்றார்.
2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொலைக்காட்சியில் பிரதானியாக நான் பதவி வகித்த போது புலனாய்வு பிரிவின் பிரதானியான சுரேஷ் சலேவுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட ஹந்தர விதாரன என்பவர் யுத்தம் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு பலமுறை வலிறுத்தினார்.
நான் முடியாது அதற்கான அதிகாரம் எனக்கில்லை என்று குறிப்பிட்டேன். அதன் பின்னர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில் தான் ராஜபக்ஷர்களின் அரசியல் வரலாறு காணப்படுகிறது.
அத் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பத்திரிகை ஒன்றின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வாறான சூழலில் கொழும்பு மாநாக சபையின் முன்னாள் மேயரின் வீட்டில் இடம்பெற்ற ஒரு சந்திப்பின் போது அரச புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் என்னிடம் உங்களை 24 மணிநேரத்துக்குள் கொலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே உயிரை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றார்.
அதன் பின்னர் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் தலையீட்டுடன் நான் பாதுகாக்கப்பட்டேன். ஆகவே இதுவே ராஜபக்ஷர்களின் வரலாறு. பொதுஜன பெரமுனவின் புதிய உறுப்பினர்களுக்கு இவை தெரியாது" என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.