ராஜபக்ச குடும்ப குற்றச்சாட்டுக்கள் ஒருபுறமிருக்க ரணில், சஜித் அரசியல் சதுரங்க விளையாட்டு மிகவும் ஆபத்தானது!
சில வாரங்களில் அவதானிக்கப்பட்ட அரசியல் நகர்வு என்னவென்றால், ராஜபக்ச குடும்பம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் ஒருபுறமிருக்க, ரணில். சஜித் ஆகியோரின் அரசியல் சதுரங்க விளையாட்டு மிகவும் ஆபத்தானது என்பதே.
அரசியலுக்கு அப்பால் விலைவாசி நெருக்கடியில் இருந்து மக்களை மீட்கும் உடனடித் தீர்வு ரணில், சஜித் ஆகிய இருவருடமும் இல்லை. பரிந்துரைகள் உரிய முறையில் முன்வைக்கப்படவுமில்லை ராஜபக்ச, ரணில். சஜித் என்ற சதுரங்க விளையாட்டுக்குள் ஜே.வி.பி தனது அரசியலைத் தக்க வைக்கப் பொறிக்குள் அகப்பட்ட எலி போன்று பெரும்பாடுபடுகின்றது.
இந்தச் சதுரங்க விளையாட்டுக்குள், ஜனநாயகம், மனித உரிமைப் பற்றிப் போதிக்கின்ற அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மேற்கொள்ளும் காய் நகா்த்தல்களும், எதிர்கால இலங்கைத்தீவுக்கு மேலும் சங்கடங்களை உருவாக்கும் என்பது பகிரங்கமாக வெளிப்படுகின்றது. அமெரிக்கா ஒரு வழியாகவும், இந்திய மற்றொரு மார்க்கமாகவும் இலங்கையின் அரசியல் நிலைமைகளை அறிவது மாத்திரமல்ல, தமது நலன்சார்ந்து வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உளவு பார்க்கின்றன.
சீனா வேறொரு கோணத்தில் இலங்கை பற்றிச் சிந்திக்கிறது. இலங்கை இந்த நிலைமைக்கு வருவதற்குப் பல காரணிகள் இருந்தாலும், இந்த வல்லாதிக்க நாடுகள் இலங்கை தொடர்பாகக் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட நகர்வுகளும் இந்த அவலங்களுக்குப் பிரதான காரணம் என்பது கண்கூடு.
பணத்தைக் கொடுத்து இலங்கை அரசியல் வாதிகளை விலைக்கு வாங்கித் தமது புவிசார் அரசியலுக்குச் சாதகமாக்கி நலன்களை அனுபவித்து வரும் இந்த நாடுகள், தற்போதைய இந்த அவல நிலமைகளுக்கு மத்தியிலும் மீண்டும் மீண்டும் அதனையே வேறொரு புதிய வழிமுறையில் கையாண்டு வருகின்றன. அதாவது நெருக்கடி நிலையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ராஜபக்ச அரசாங்கத்தை முழங்காலில் இருத்திவைத்துத் தமது நலனுக்காகப் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றன.
ரணில், சஜித் போன்ற ஏனைய சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் இது நேரடி எச்சரிக்கைதான். நெருக்கடி நிலையில் வல்லாதிக்க நாடுகளினால் தற்போது கையாளப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தப் புதிய வழி, முழங்காலில் இருத்தி வைத்துப் பேரம் பேசுதல்தான். ஆனால் மக்கள் நலன் அல்லது இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார உறுதிப்பாடு, சுய பொருளாதார வளர்ச்சி என்பதில் இந்த வல்லாதிக்க நாடுகளுக்குக் கொஞ்சம்கூட அக்கறையில்லை.
ஆகவே இனரீதியான அரசியல், பொருளாதாரத் திட்டங்களைக் கைவிட்டு, இது பௌத்த நாடு என்ற சிந்தனைனையை ஒதுக்கிவைத்து, இது எங்கள் நாடு என்று உணர்ந்து ஆட்சி அதிகாரமுறையில் மாற்றங்களை உருவாக்கினால் மாத்திரமே அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும். அதாவது மகாவம்ச மன நிலையில் இருந்து சிங்களவர்கள் விடுபட்டால், வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் அமெரிக்கா, இந்தியா, சீனா மாத்திரமல்ல எந்தக் கொம்பனும் இலங்கைப் பக்கம் தலைகாட்ட முடியாது.
முழங்காலில் இருத்தி வைத்துக் கொண்டு தற்போது பேரம் பேசும் இதே வல்லாதிக்க நாடுகளைக் கொண்டே 2009 இல் சுற்றிவைத்து அடிக்கப்பட்டது--- அந்த வலியைத் தற்போது உணர்ந்திருப்பதாகத் தற்காலிகமாகக் காட்டிக் கொண்டிருக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள், தமிழ் - முஸ்லிம் மக்களையும் சம அளவில் அங்கீகரித்தால் மாத்திரமே, உலகில் பிச்சை கேட்கும் அவலத்தில் இருந்து விடுபடலாம் என்ற உண்மையை முழுமையாக நம்ப வேண்டும்.
Amirthanayagam Nixon