3,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட தண்டவாள பாகங்கள் ; போதை ஆசாமியால் இலங்கையில் அரங்கேறிய பெரும் அசம்பாவிதம்
வனவாசல ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் 3,000 ரூபாய் பணத்திற்காகவே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்த இடம் அடையாளம் காணப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக, ரயில் தண்டவாளத்தின் ஆணைகளைக் கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவல்களின் அடிப்படையிலேயே, பொருட்களைக் கொள்வனவு செய்த நபரைக் கைது செய்ய முடிந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

போதைப்பொருளுக்கு அடிமை
ரயில் தண்டவாளப் பாகங்களைக் கழற்றிய நபர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், அவர் 25 வயதுடைய ஒரு இளைஞர் எனவும் காலிங்க ஜயசிங்க தெரிவித்தார்.
வனவாசல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்து குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதற்காகதான் ஸ்டாலினை சந்தித்தாரா? உண்மையை உடைத்த ரஜினிகாந்த் ; முதலமைச்சர் விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்
பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமைக்கு மேலதிகமாக, இந்த விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நட்டங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க இங்கு குறிப்பிட்டார்.
இந்தப் பாகங்களைக் கழற்றி விற்பனை செய்வதன் மூலம் மிகக் குறைந்த லாபமே கிடைத்த போதிலும், இவ்வாறான சம்பவங்கள் ஊடாக மில்லியன் கணக்கிலான நட்டங்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, திருடப்பட்ட பொதுச் சொத்துக்களைத் தெரிந்தே கொள்வனவு செய்தமைக்காக, அந்தப் பொருட்களை வாங்கிய நபருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படும் என அவர் தெரிவித்தார்.