யாழில் அம்பலமான மிகப் பெரும் மோசடி ; பொலிஸாரின் ஒரு வருட முயற்சியால் பிடிபட்ட புத்தளம் வாசி
யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு உதவிய குற்றச்சாட்டில், ஒரு வருட தேடுதலின் பின்னர் புத்தளத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியில் சுமார் 160 பரப்பு காணியை போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இரகசியத் தகவல்
இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிக்கு உதவியதாக அடையாளம் காணப்பட்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்ய, கடந்த ஒரு வருட காலமாக பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குறித்த நபர் இன்று (20) யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி பகுதியில் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.