இலங்கையில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை மர்ம பொருள்!
புத்தளம் - மன்னார் வீதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடல் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (25-12-2021) நள்ளிரவு முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இக்கைது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, புத்தளம் தலைமையக பொறுப்பதிகாரி ருவன் சுரங்க உடுகும்புரவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பகுதியில் நள்ளிரவு விசேட சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மூன்று உர மூடைகளில் அடைக்கப்பட்ட 487 சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மன்னார் - கற்பிட்டி ஆகிய பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த சங்குகள், சட்டவிரோதமாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என புத்தளம் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட சங்குகள் ஜாதி மற்றும் கௌரி இனத்தைச் சேர்ந்தவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.