புத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் உயிரை பறித்த கோர விபத்து! துயரத்தில் 4 பிள்ளைகள்
புத்தளம், இடம்பெற்ற விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் புத்தளம், சிலாபம் – ஆனமடுவ வீதியில் பல்லம சேருகெலே சந்தியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் பல்லம சேலுகெலே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான விமல் த பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது, குறித்த நபர் துவிச்சக்கரவண்டியில் சேருகல் சந்திக்கு வந்து, கிறிஸ்துமஸ் தினத்தன்று கொளுத்துவதற்காக பட்டாசு பொதியுடன், பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் போது, வேன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை மோதிவிட்டு அந்த வேனின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராவின் உதவியுடன், விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.