புரட்டாசி மாதத்தின் சிறப்புக்கள்; மகத்துவம் வாய்ந்த மகாளய அமாவாசை!
புண்ணிய மாதமான புரட்டாசி மாதம் இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி துவங்குகிறது.
புரட்டாசியின் முதல் மற்றும் கடைசி ஆகிய இரண்டு நாட்களுமே பெளர்ணமி திதியாக அமைவதால், இந்த நாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
செப்டம்பர் 17ம் திகதி துவங்கி, அக்டோபர் 17ம் திகதி வரை அமைந்துள்ள புரட்டாசி மாதம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தியும், 2வது சனிக்கிழமையில் ஏகாதசியும், கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதம், விஜய தசமி ஆகியனும், அதற்கு அடுத்த நாளே ஏகாதசியும் வருவதாக அமைந்துள்ளது.
அக்டோபர் 02ம் திகதியான புதன்கிழமை மகாளய அமாவாசையும், 2 பவுர்ணமிகளும் புரட்டாசி மாதத்தில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
மகாளய அமாவாசை - முன்னோர்கள் வழிபாடு
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை. மகாளய பட்சம் அமாவாசையில் பட்சம் என்றால் பதினைந்து நாட்கள்.
மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
மகாளய அமாவாசை தினத்தில், தாய்வழி, தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனி சிறப்பாகும்.
புண்ணியம் தரும் புரட்டாசி மாதம்
அதுமட்டுமல்லாது தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்த, புண்ணியம் தரும் மாதங்களில் ஒன்று புரட்டாசி மாதமாகும்.
பொதுவாக ஒரு மாதத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரம், திதி, கிழமை ஆகியவை தான் சிறப்பானதாக இருக்கும். ஆனால் மாதத்தின் அனைத்து நாட்களுமே சிறப்பு பெற்று, புண்ணிய பலன்களை தரும் மாதங்களில் ஒன்று தான் புரட்டாசி.
இது தெய்வ அருள் மட்டுமின்றி முன்னோர்களின் அருளையும் நமக்கு பரிபூரணமாக பெற்றுத் தரும்.
புரட்டாசி மாதத்தில் நாம் செய்யும் வழிபாடும், வழங்கும் தானமும் முன் ஜென்ம பாவங்களை நீக்கி, வாழும் காலத்தில் மகிழ்ச்சியையும், வாழ்க்கைக்கு பிறகு இறைவனின் திருவடியில் இருக்கும் பாக்கியமும் கிடைக்க செய்யும்.
சனிபகவான் வழிபாடு
தெய்வங்கள் பெருமாளை வழிபட பூமிக்கு வரும் புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் என சொல்லப்படுவதால் சனியால் பாதிப்பு இருப்பவர்கள் புரட்டாசியில் விரதம் இருந்தால் அதிலிருந்து விடுபடலாம்.
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை.