60 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை பேருந்து நிலையம்
பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளது.
புதுப்பித்தல் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 424 மில்லியன் ரூபாய்களாகும். புறக்கோட்டை பகுதிக்கு வரும் மக்களின் வசதிக்காக இந்த மத்திய பேருந்து நிலையம் 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
தற்போது, இங்கிருந்து தினமும் 1,500க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையம், பல தசாப்தங்களாக முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், நாட்டிலுள்ள 50 பேருந்து நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் தொடங்கப்படவுள்ளது.
விமானப்படை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
புதிய திட்டத்தின் கீழ், பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் மற்றும் தொடர்பு மையங்கள், மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்படவுள்ளன.
புதுப்பிப்பு பணிகளுக்காக பேருந்து நிலையத்தில் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்திருந்த கடைகள், புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அகற்றப்பட்டுள்ளன.